wibiya widget

Vijay Receive Award

Sunday, July 11, 2010


விஜய்க்கு 'ரசிகர்கள் அபிமான நடிகர்' விருது!


சென்னை: கலைஞர் தொலைக்காட்சியின் இசையருவி சேனல் நடத்திய விழாவில் நடிகர் விஜய்க்கு 'ரசிகர்களின் அபிமான நட்சத்திரம் விருது' வழங்கப்பட்டது.


கலைஞர் குழுமத்தின் சேனல்களில் ஒன்றான இசையருவி சேனல்,  இசை வித்தகர்களை பாராட்டும் விதமாக ஆண்டுதோறும் பாராட்டு விழா நடத்தி விருதுகளை வழங்கி வருகிறது.

இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் சனிக்கிழமை மாலை நடந்தது. விழாவில் ரசிகர்களின் அபிமான நட்சத்திர விருதுக்கென இசை ரசிகர்களால் நடிகர் விஜய் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலினும், இயக்குநர் தரணியும் விருதை வழங்கினார்கள்.

விழாவில் சிறந்த அறிமுகப்பாடல், பாடகர், பாடகி, இசையமைப்பாளர் ஆகியோருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. சிறந்த அறிமுகப் பாடகராக ராகுல்நம்பியார் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு இயக்குநர் வசந்த் விருது வழங்கினார்.

சிறந்த அறிமுகப்பாடகி விருது நடிகையும் பாடகியுமான ஆன்ட்ரியாவுக்கு கிடைத்தது. அவர் சார்பில் 'ரெட்டைச்சுழி' படத்தின் நாயகன் ஆரி பெற்றுக் கொண்டார்.

சிறந்த அறிமுக இசையமைப்பாளர் விருதை வெண்ணிலா கபடிக்குழு படத்தின் இசையமைப்பாளர் வி.செல்வகணேஷுக்கு இசையமைப்பாளர் (சங்கர்) கணேஷ் வழங்கினார். சிறந்த அறிமுகப்பாடலாக 'ஆதவன்' படத்தில் இடம் பெற்ற 'அசிலிபிசிலி' பாடல் தேர்வானது.

இந்தப் பாடலுக்கான விருதை இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜுக்கு நடிகர் கார்த்தி வழங்கினார். சிறந்தமுறையில் பாடலை காட்சிப்படுத்துவதற்கான விருதை 'சர்வம்' படத்துக்காக இயக்குநர் விஷ்ணுவர்த்தன் பெற்றுக் கொண்டார். இயக்குநர் சேரன் இந்த விருதை வழங்கினார்.

சிறந்த பாடல்ஆசிரியருக்கான விருது கவிஞர் பா.விஜய்க்கு கிடைத்தது. பாடகி விருது சின்மயிக்கும், சர்வதேச இசை சாதனையாளர் விருது ஏ.ஆர். ரஹ்மானுக்கும் வழங்கப்பட்டது.

பாடல் காட்சியில் சிறந்த நடிப்புக்கான விருது 'ஆதவன்' படத்தில் நடித்த சூர்யாவுக்கு கிடைத்தது. அவருக்கு இயக்குநர் சேரன் இந்த விருதை வழங்கினார். ஒளிப்பதிவில் சிறந்த பாடலாக 'பொக்கிஷம்' படத்தில் இடம் பெற்ற 'நிலா நீ அது வானம்' பாடல் தேர்ந்தெடுக்கப்பட்டது.

இளையராஜாதான் காரணம்!

சிறந்த குத்துப்பாட்டுக்கான இசையமைப்பாளர் விருது 'ராஜாதிராஜா' படத்துக்கு இசைமைத்த நடிகரும் இசையமைப்பாளருமான கருணாசுக்கும், பின்னணி இசைக்கான விருது 'உன்னைப்போல் ஒருவன்' படத்துக்கு இசையமைத்த ஸ்ருதி ஹாசனுக்கும் கிடைத்தது. ஸ்ருதி ஹாசனுக்கு விருதை இசையமைப்பாளர் இளையராஜா வழங்கினார்.

விழாவில் கலைஞர் டி.வி.யின் முதன்மை நிர்வாகி அமிர்தம், இளையராஜாவுக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்தினார். "இந்த இசையருவி தொடங்க காரணம் இளையராஜா தான்'' என்று புகழாரம் சூட்டினார்.

சாதனையாளர் விருது

விழாவில் கவிஞர் வாலிக்கும், பாடகர் எஸ்.பி.பாலசுப்பிமணியத்துக்கும் 'வாழ்நாள் சாதனையாளர்' விருதுகள் வழங்கப்பட்டன. பாடகர் பாலமுரளி கிருஷ்ணா, எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கும், எம்.எஸ்.விஸ்வநாதன், கவிஞர் வாலிக்கும் இந்த விருதை வழங்கினார்கள்.

0 comments:

Post a Comment

Followers