சிகப்பு ரோஜாக்கள் (கதை - பாக்யராஜ்), அந்த ஏழு நாட்கள், மௌன கீதங்கள், எங்க சின்ன ராசா, வீட்டுல விசேஷங்க... இப்படி பாக்யராஜின் அனைத்துப் படங்களுமே இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு பெரும் வெற்றி பெற்றன.
கடைசியாக அவர் இயக்கிய படம் பாரிஜாதம். அதன் பிறகு சிறிய இடைவெளிக்குப் பிறகு இப்போது மகன் சாந்தனுவை வைத்து சித்து - ப்ளஸ் டூ பர்ஸ்ட் அட்டம்ட் எனும் புதிய படத்தை இயக்கி வருகிறார். கேபிஆர் மீடியா எனும் அவரது சொந்த பேனரில் தயாரிக்கப்பட்ட இந்தப் படத்தைப் பற்றி இதுவரை எந்தத் தகவலும் வெளியிடாமல் ரகசியம் காத்து வந்த பாக்யராஜ், படத்தை முழுமையாக முடித்து, பின்னணி இசை சேர்ப்பு உள்ளிட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகளையும் முடித்த பிறகே அதுபற்றி செய்தியை வெளியிட்டார்.
படத்தின் ஆடியோ வெளியீடு நேற்று சென்னை சத்யம் வளாகத்தில் நடந்தது. நடிகர் விஜய் முதல் சிடியை வெளியிட, கலைப்புலி எஸ் தாணு பெற்றுக் கொண்டார்.
விழாவில் விஜய் பேசுகையில், "எனக்கு மட்டுமல்ல, என்னுடைய நண்பர்களுக்கும்கூட என்றுமே விருப்பமான இயக்குநர் கே பாக்யராஜ்தான். சந்தோஷம், சங்கடமாக இருந்தாலும் சரி, பாக்யராஜ் படம்தான் பார்ப்போம்.
குறிப்பாக, அவர் இயக்கி நடித்த 'இன்று போய் நாளை வா' படத்தை அடிக்கடி பார்ப்போம். அதில், இந்தி பண்டிட் பாடம் எடுக்கிற காட்சியும், கல்லாப்பெட்டி சிங்காரம் சாக்கடைக்குள் விழுந்து இன்னொரு குழி வழியாக வெளியே வரும் காட்சியும் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது... அவர் படத்தின் ஆடியோவை நான் வெளியிடுவது எனக்கு கிடைத்த பெருமை" என்றார்.
பாக்யராஜ் மகன் சாந்தனு பேசியபோது, "எங்க அப்பா கீழே இருந்து உயரத்துக்கு வந்தவர். தாவணிக்கனவுகள், முந்தானை முடிச்சு படங்கள் வரும்போது எப்படி இருந்தாரோ, அப்படி மீண்டும் அவரை தலைநிமிர்ந்து நடக்க வைப்பேன் என்றார்.
0 comments:
Post a Comment