திருச்சியில் படித்தபோது காதலித்து, காதல் கை கூடாமல் போன தனது ஸ்ரீரங்கத்து தேவதை, சென்னையில் அவள் வீட்டில் இறந்து கிடப்பது கண்டு அதிர்ச்சியுறும் போலீஸ் அதிகாரி ஹீரோவால் அவளது கொலையை தற்கொலையாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தற்கொலை என பைலை மூட வேண்டிய அந்த கேஸை தானே வலிய ஏற்று நடத்தும் ஹீரோ, கொலையாளி யார்? என்பதை கண்டுபிடிக்கிறார். அதற்கு முன் தன் கொலைக்கு காரணியானவர்களை கொன்று குவிக்கிறது நாயகியின் ஆவி. இதை வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் எத்தனை தூரம் சொல்ல முடியுமோ, அத்தனை தூரம் சொல்லி அசத்தி இருக்கிறார் இயக்குனர் அறிவழகன். சும்மாவா...? ஷங்கரின் சிஷ்யர் ஆயிற்றே..!
ஒரு காவல் அதிகாரியாகவும், அதற்கு முன் கல்லூரி மாணவராகவும் ஹீரோ ஆதி தன் பங்கை கச்சிதமாக செய்திருக்கிறார். மிருகம் ஆதியா இது? நம்ப முடியவில்லை! அத்தனை ஹேண்ட்சம். கல்லூரி மாணவர் பருவத்து காதல், காவல் அதிகாரி கண்டிப்பு.. என இரு வேறு பரிணாமங்களில் கலக்கி இருக்கிறார் ஆதி. மற்றொரு நாயகராக, நாயகியின் கணவராக நந்தா, தமிழ் சினிமாவிற்கு சைக்கோதனமான மற்றொரு வில்லனிக் ஹீரோ. பேஷ்.. பேஷ்..! சபாஷ்!
நாயகி சிந்துமேனன் அழகியாகவும், ஆவியாகவும் அசத்தி இருக்கிறார். இவரை மாதிரியே அவரது தங்கை சரண்யா மோகனும் தங்கை கேரக்டரில் தன் பங்கை சரியாக செய்திருக்கிறார். சரண்யா உடம்பில் சிந்துவின் ஆவி புகுந்து கொண்டு அடிக்கடி ஆதியின் முன் சரண்யா, சிந்துவாக தோன்றும் இடங்களில் சிந்துவை ஓவர்டேக் செய்து விடுகிறார் சரண்யா. இவரை தங்கை என்பதைவிட இரண்டாம் நாயகி என்று சொல்வதே பொருந்தும். இவர்களைப் போலவே கண்ணன், ஸ்ரீநாத், ராஜன், ராஜசேகர், லட்சுமி, ஸ்ரீவத்சன் உள்ளிட்டவர்களும் மிரட்டும் நடிப்பில் நம்மை மிரள வைக்கிறார்கள்.
பிளாஷ்பேக்கில் ஆதி - சிந்து மேனனின் காதல் கண்ணாமூச்சி, சிந்து மேனனின் அப்பா போலீஸ் மாப்பிள்ளை வேண்டாம் என இவர்களது காதலை நாகரிகமாக மறுக்கும் வசனக் காட்சி, சைக்கோ கணவரிடம் தன் பழைய காதலை சொல்லி வம்பில் சிந்து மாட்டிக் கொள்ளும் இடம், அதன் பின் நந்தா, சிந்துவை சந்தேகப்படும் இடங்கள்.. என ஆங்காங்கே அழகாக தெரியும் இயக்குனர் அறிவழகனுக்கு, இசையமைப்பாளர் தமனும், ஒளிப்பதிவாளர் மனோஜ் பரம ஹம்சாவும் பலமாகவும், ரசிகர்களிடம் படத்தை கொண்டு சேர்க்கும் பாலமாகவும் அமைந்துள்ளனர்.
வாட்டர் பில்டரில் இருந்து சொட்டும் தண்ணீர் மூலம்கூட நம்மை பயமுறுத்தும் இயக்குனரும், இசையமைப்பாளரும், இப்பட குழுவினரும் கதையை விட காட்சியமைப்பில் ஹாலிவுட் படங்களையே மிஞலு்சி விடுகின்றனர். அதேநேரம் பிளாக் வாட்டர் எனும் ஆங்கில படத்தையும் அவ்வப்போது ஞாபகப்படுத்துவதையும் தவிர்த்திருந்தால் ஈரம் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்
0 comments:
Post a Comment