wibiya widget

Unnai Pol Oruvan

Friday, October 30, 2009

உலக நாடுகளையும், அதன் சட்ட திட்டங்களையும் தப்பிதப் படுத்திக் கொண்டு தீவிரவாதம் எனும் பெயரில் அப்பாவிகளை கொன்று குவிக்கும் தீவிரவாத குழுக்களுக்கு தன் பாணியில் (இந்தியில் எ வெட்னஸ்டே எனும் பெயரில் வெளிவந்த வெற்றிப்பட தழுவல்தான் இந்த படம் என்றாலும்..) தனி தொனியில் உன்னைப்போல் ஒருவன் படத்தின் மூலம் செவிட்டில் அறைந்திருக்கிறார் கமல்!

நகரின் உயரமான கட்டிடத்தின் உச்சியில், அதுவும் முழுதாக கட்டி முடிக்கப்படாத கட்டிடத்தின் உச்சியில்... சவுகரியமாக உட்கார்ந்து கொண்டு பல்வேறு தகவல் தொழில்நுட்ப சாதனங்களை பயன்படுத்தி தன்னை கண்டுபிடித்து விடாதபடிக்கு போலீஸ் கமிஷனருக்கு போன் போடுகிறார் கமல். வெவ்வேறு குண்டு வைத்து பலரது உயிரை பறித்து சிறையில் இருக்கும் நான்கு தீவிரவாதிகளை விடுவித்து தன்னிடம் ஒப்படைக்க வேண்டும். இல்லையேல் இன்று மாலை ஐந்தாறு இடங்களில் சிட்டி முழுதும் தான் வைத்துள்ள சக்தி வாய்ந்த பாம் வெடிக்கும். சாம்பிளுக்கு தற்போது சென்னை அண்ணா சாலை போலீஸ் ஸ்டேஷனில் தான் வைத்துள்ள ‌வெடிகுண்டு இன்னும் அரை மணி நேரத்தில் வெடிக்கும். முடிந்தால் தடுத்துக் கொள்ளுங்கள்... என போனை கட் செய்கிறார். அப்புறம்...? அப்புறமென்ன...? அடுத்தடுத்து வரும் கமலின் அனாமத்து கால்களை ஒருபக்கம் ட்ரேஸ் செய்யும் முயற்சியில் இறங்கும் மாநகர காவல், மற்றொரு பக்கம் அவரது கட்டளைக்கு கீழ்ப்படியவும் செய்கிறது. முதல்வர், தலைமைச் செயலாளர் உள்ளிட்டவர்களின் உத்தரவுபடி போலீஸ் கமிஷனர் மோகன்லால் தனது இளம் போலீஸ் டீமின் உதவியுடன் நேரடியாக களத்தில் இறங்கி பரபரப்பை கூட்டுகிறார். கதாநாயகர் கமல் தீவிரவாதியா? முள்ளை முள்ளால் எடுக்க நினைக்கும் பொதுஜனவாதியா? என்பதற்கு விடை சொல்கிறது மீதிக் கதை!

கோயம்பேடு மார்க்கெட் சென்று காய்கறி வாங்கிக் கொண்டு வீடு திரும்பும் குடும்பஸ்தர் கமல், தனது புத்திசாலித்தனத்தால் ஒட்டு மொத்த போலீசையும் திணறடித்து, காட்சிக்கு காட்சி விறுவிறுப்பு ஏற்படுத்துகிறார். உட்கார்ந்த இடத்திலேயே போரடிக்காமல் இப்படி விறுவிறுப்பை ஏற்படுத்த கமலால் மட்டுமே முடியும். பேஷ்!

கமலை விட நடிக்கவும், டயலாக் பேசவும் நிறைய வாய்ப்பு போலீஸ் கமிஷனர் மோகன்லாலுக்கு...! லால் மட்டு சளைத்தவரா என்ன? அவரும் அவர் பங்‌கை அசத்தலாக செய்திருப்பதோடு அத்தனை பரபரப்பிலும் டயலாக்கில் சின்ன சின்ன காமெடிகளை செய்து கலக்கியிருக்கிறார்.

தலைமை செயலாளர் லட்சுமி, இசட் பிரிவு பாதுகாப்பு கேட்கும் முன்னணி நடிகர் ஸ்ரீமன், மனைவிடம் மண்டை உடைபட்டு ஸ்டேஷன் வரும் எம்.எஸ்.பாஸ்கர், சப்-இன்ஸ்பெக்டர் சிவாஜி, துடிப்பான இளம் போலீஸ் அதிகாரிகளாக பிரேம்குமார், கணேஷ் வெங்கட்ராமன் உள்ளிட்டவர்களின் மிடுக்கு போன்றே... தொலைபேசியிலேயே கட்டளை பிறப்பிக்கும் முதல்வரின் குரலும் பிரமாதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளது என்றால் மிகையல்ல...!

ஒவ்வொரு பிரேமிலும் ஸ்ருதிஹாசனின் இசை, அவரை கமலின் வாரிசு என்பதை மெய்ப்பிக்க தவறவில்லை. படத்திற்கு பக்கபலமாக அமைந்து மிரட்டலாக இருக்கிறது இசை! தீவிரவாதிகளில் ஒருவனை இந்துவாகவும், போலீஸில் ஒருவரை இஸ்லாமியராகவும் காட்டி எந்த வம்பு, தும்பிலும் சிக்காமல் படம் எடுத்திருக்கும் இயக்குனர் சக்ரி டோலேட்டியின் இயக்கத்தில் வேகமும், விவேகமும் கலந்து கட்டி கலக்கியிருக்கிறது. சில காட்சிகளில் பயத்தில் நம் வயிறும், க்ளைமாக்ஸில் கண்களும் சேர்ந்து கலங்குவது இப்படத்தின் பெரும் பலம்!

0 comments:

Post a Comment

Followers