Pages

Pages

Tuesday, October 27, 2009

Peranmai




ஜெயம் ரவி தனது ஆண்மையை அதுவும் ஐந்து புதுமுக நாயகிகளுடன் உலகிற்கு காட்டியிருக்கும் படம்தான் பேராண்மை! ஆண்மை. ஐந்து நாயகி என்றதும் ஆளுக்கு ஒரு டூயட்... அது பத்தாதற்கு அயிட்டம் டான்ஸ் எனும் போர்வையில் குத்தாட்ட நடிகைகளுடன் கும்மாளம் என ஏதோ வழக்கமான காதல் களியாட்ட மசாலா படம் எனும் முடிவிற்கு வந்து விடாதீர்கள். இது நிஜமான பேராண்மை! நியாயமான போர் ஆண்மை!!

அடித்து வார்க்கப்பட்ட இரும்பு வார்ப்பாக துருவன் கேரக்டருக்கு கச்சிதமாகப் பொருந்துகிறார் ஜெயம் ரவி. ஒவ்வொரு நொடியும் உஷாராக இருப்பது, கோவணம் கட்டி மாட்டுக்குப் பிரசவம் பார்ப்பது, அவமானங்களுக்கு மத்தியில் முளைத்துக் கிளம்புவது எனப் பழங்குடியினரின் இயல்புகளைப் பிரமாதமாகப் பிரதிபலிக்கிறார் ரவி. வெல்டன் துருவன்!


கதைப்படி அடர்ந்த காட்டுப்பகுதியில் ஒரு கிராமமாக வசிக்கும் பழங்குடியின வகுப்பில் பிறந்து வளரும் துருவன் பல்கலையும் படித்து அதே பகுதியில் ஜூனியர் காட்டு இலாகா அதிகாரியாக பணிபுரிகிறார். அந்த ஊருக்கு என்.சி.சி., டிரைனிங்கிற்காக வரும் கல்லூரி மாணவிகளில் ஐந்து பேரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு அந்த காட்டில் வசிப்பது, விலங்குகளை எதிர்த்து போரிடுவது உள்ளிட்ட இன்னும் பல பயிற்சிகளை அளிக்கும் பணி துருவனுக்கு வழங்கப்படுகிறது. அதை மிகவும் கண்டிப்பும், கட்டுப்பாடுமாக செய்யும் துருவனை ஆதிவாசி, காட்டுப்பய என கிண்டலடித்து துரத்தியடிக்கப் பார்க்கின்றனர் கல்லூரி மாணவியர். அந்த பட்டாளத்தின் கொட்டத்தை அடக்கி, அவர்களில் 5 பேரை காட்டுக்கு அழைத்துப் போகும் துருவன், இந்தியா அனுப்ப உள்ள ராக்‌கெட்டை தகர்க்கும் சதித் திட்டத்துடன் ஊடுருவியிருக்கும் 16 பேர் கொண்ட அயல்நாட்டு சதிகாரர்களை இந்த 5 மாணவிகள் உதவியு‌டன் தீர்த்து கட்டி, செய்யும் சாகசங்கள்தான் பேராண்மை.

துருவனாக ஹீரோ ஜெயம் ரவி உடம்பு இளைத்து, மிலிட்டரி கெட்-அப்பில் மிரட்டியிருக்கிறார். இதுநாள் வரை காதல் நாயகராக வந்த ஜெயம் ரவியிடம் இத்தனை ஆண்மையும், பேராண்மையும் வெளிப்படுவதில் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதனும் தெரிகிறார். சபாஷ்!!

ஐந்து புதுமுகங்களில் ஓரிருவர் தவிர மற்ற நாயகிகள் ஆங்காங்கே ஒருசில படங்களில் பார்த்த முகங்கள் என்றாலும் இதில் பாத்திரம் உணர்ந்து நடித்து பலே சொல்ல வைத்திருக்கிறார்கள்.

நாயகர், நாயகியர் தவிர ஹீரோவின் உயரதிகாரியாக வரும் பொன்வண்ணனும், என்.சி.சி. டீச்சராக வரும் ஊர்வசியும் பாத்திரத்திற்கேற்ற பலமான ‌தேர்வு. ஜெயம் ரவியை ஆதிவாசி, காட்டுப்பய என மாணவிகளுடன் சேர்ந்து அடிக்கடி அவரது ஜாதியை சொல்லி கீழ்த்தரமாக நடந்து கொண்டு, அவரது கிராமத்தையே காலி செய்யும் பொன்வண்ணன், ஜெயம் ரவியின் சாகசங்களையெல்லாம் தனதாக்கிக் கொண்டு ஜனாதிபதியிடம் க்ளைமாக்ஸில் விருது பெறுவது கீழ்த்தரமாக நடந்து கொள்பவர்களுக்கு சரியான சவுக்கடி. பொன்வண்ணன் மாதிரியே ஒவ்வொரு கேரக்டர் மூலமும் இயக்குனர் தனக்கு தெரிந்த முதலாளித்துவத்தை எதிக்கும் கம்யூனிசத்தையும், சித்தாந்தத்தையும் புகுத்தி புரட்சி செய்திருப்பது புதுமை.

கல்லூரி பியூனாக வந்து ஹீரோ ரவிக்கு சப்போர்ட்டாக ‌பேசி அடிக்கடி பொன்வன்னண் மற்றும் அவரது டீமிடம் அடியும் உதையும் வாங்கிக் கொள்ளும் வடிவேலும் அவரது காமெடியும் வழக்கம்போலவே செம கலாட்டா.

‌ஜெயம்ரவி, 5 மாணவி(நாயகி)கள்,‌ பொன்வண்ணன், ஊர்வசி, வடிவேலு மாதிரியே படத்தின் பின் பாதியில் தீவிரவாதிகளாக வரும் 16 வெள்ளைக்காரர்களும், அவர்களது நடிப்பும் பிரமாதம். கோலிவுட் பேராண்மையை இவர்கள் ஹாலிவுட் படமாக்கியிருப்பது ஹைலைட். இயக்குனர் ஜனநாதன் காட்சிக்கு காட்சி தனது பாத்திரங்கள் மூலமும். சமூக அவலங்களை வசனமாக்கி அதன் மூலம் தெரிவது போன்றே, இசையமைப்பாளர் வித்யாசாகர், பாடலாசிரியர் வைரமுத்து, ஒளிப்பதிவாளர் எஸ்.பி.சதீஷ்குமார், எடிட்டர் விஜயன் உள்ளிட்டவர்களும் படம் முழுக்க தங்களை பளிச்சென வெளிப்படுத்திருக்கிறார்கள்.

கார்ப்பரேட் நிறுவனங்கள் பலவும் கரப்டட் என கூடாரத்தை தமிழ் சினிமாவில் காலி செய்து வரும் வேளையில் ஐங்கரன் இன்டர்நேஷனல் நிறுவனத்தில் முக்கிய பதவியில் இருக்கும் நடிகர் அருண்பாண்டியன் கூறியது போன்று, அவர்கள் தயாரித்த வில்லு, ஏகன் உள்ளிட்ட ஒரு டஜனுக்கும் மேற்பட்ட படங்களில் முதல் வெற்றிப்படம் எனும் ‌பெருமையை பேராண்மை பெற்றிருக்கிறது என்றால் மிகையல்ல. அதற்கு முழுமுதல் காரணம் ஹீரோவும், இயக்குனருமே!

பின் பாதியில் இருக்கும் விறுவிறுப்பும் வேகமும், முன்பாதியிலும் இருந்திருந்தால் பேராண்மை இன்னும் பெரும் ஆண்மையாக இருந்திருக்கும். என்றாலும் வழக்கமான தமிழ் சினிமாவில் இருந்து முற்றிலும் மாறுபட்டு, படமாகியிருக்கும் பேராண்மை இயக்குனர் - நாயகன் - தயாரிப்பாளர் மூவரது துணிச்சல்களால் போற்றும் ஆண்மைதான்.

No comments:

Post a Comment